திசை மாறாத பறவை… (Tamil Edition)


Price: ₹99.00
(as of May 06, 2024 07:09:40 UTC – Details)



வாசலுக்கும் தெருவிற்குமாய் பதட்டமாய் நடை போட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. நேரம் தான் கடந்து கொண்டே போனதே தவிர மீரா வரும் சுவடே தெரியவில்லை. தெருமுனைவரை பார்வையை வீசிவிட்டு தயக்கமாய் வீட்டினுள் நுழைந்தார்.
ஹாலின் டி.வி.யில் ஒன்பது மணிக்கான சீரியல் ஆரம்பமாகிக் கொண்டிருக்க, ஒரு ஒரமாய் போடப்பட்டிருந்த மேஜைமீது தனது சுரிதாரை அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தாள் கௌரி. ஏதோ பாடலை சத்தமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். தாயைக் கண்டதும் நிறுத்தினாள்.
“அம்மா! இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படியே உலாத்திட்டு இருப்ப. பசிக்குதும்மா. தோசை ஊத்து.” சிணுங்கினாள் கௌரி.
“ஏன்டி! நானே மீராவைக் காணோம்னு பதறிப் போய் இருக்கேன். உனக்கு அப்படியென்ன பசி?”
“ஆமா! அவ எங்கேயாவது ஊரைச் சுத்திட்டு வருவா. அதுவரைக்கும் நாங்க எங்க வயித்தைக் காயப் போடணுமா?”
“வாயை மூடுடி. எம்பொண்ணு என்னிக்குடி ஊரைச் சுத்திட்டு லேட்டா வந்தா? அஞ்சரைக்கெல்லாம் வந்துடுவாளே. இன்னிக்கு என்ன ஆச்சோ தெரியலையே.” பரிதவித்த அன்னையைப் பார்த்து உதட்டைச் சுளித்தாள்.
“அவ என்ன குழந்தையா தொலைஞ்சு போறதுக்கு?”
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவ குழந்தை தான்டி”
“பிறகேன் குழந்தையை வேலைக்கு அனுப்புறே. வீட்டிலயே ஒரு தொட்டில் கட்டிப்போட்டு தாலாட்டுப் பாட வேண்டியது தானே”
“பேசுவடி. உன் அப்பன் புத்தி தானே உனக்கும். அவ சம்பாதிச்சி கொண்டு வர்ற காசு வேணும் உங்களுக்கு. ஆனா அவ முக்கியமில்லை. அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கியே”
“அம்மா! ரொம்பப் பேசாதே. சம்பாதிக்கிற பணத்தை வெச்சு அவ என்ன பண்ணப்போறா? ஒரு ட்ரஸ் எடுக்கவோ ஒரு முழம் பூ வாங்கக் கூட அவளுக்கு நம்ம துணை வேணும். தனியா போய் எதையாவது வாங்கிட்டு வந்திருக்காளா? காசை செலவு பண்ணக்கூட தெரியாதவளுக்கு நாலாயிரம் ரூபா சம்பளம்.”
“அந்தப் பணத்துக்காகத்தானே எம்புள்ளைய சக்கையா பிழிஞ்சு எடுக்கிறீங்க? ஒழுங்கா சாப்பிடக் கூட நேரமில்லாம அவ துரும்பாப் போயிட்டாளே. இன்னிக்கு காலையிலயும் சண்டைபோட்டு அவளை சாப்பிட விடாம பண்ணிட்டார் உங்கப்பா”
“அவ திமிரெடுத்து சாப்பிடாமப் போனா நாங்கென்ன பண்ண முடியும்? எல்லாம் கேன்டீன்ல சாப்பிட்டு இருப்பா”
“அப்படியெல்லாம் சாப்பிடமாட்டாளே. மதியத்துக்கும் சாப்பாடு எடுத்திட்டுப் போகல்ல. பசியில மயக்கம் போட்டு எங்கும் விழுந்திட்டாளோ என்னவோ தெரியலையே”
“உன்னால பெரிய தொல்லையாப் போச்சும்மா. அப்படியெல்லாம் எதுவும் ஆகியிருக்காது. இப்ப வந்திருவா. என்க்கு தோசை ஊத்திக் கொடும்மா”
“பசிச்சா நீ போய் ஊத்தி சாப்பிடு. நான் தெருமுனை வரை போய் பார்த்திட்டு வந்திடுறேன்” – என பார்வதி நகர்ந்து போது உள்பக்க அறைக்கதவு திறக்கப்பட்டது. பார்வதியின் நடை தடைபட்டது.
தனது கனத்த சரீரத்தை அசைத்தவாறே வந்து அமர்ந்தார் திருப்பதி. தொப்பை வரை ஊஞ்சலாடிய தடிமனான தங்கச்சங்கிலியில் கற்கள் பதித்த லஷ்மி டாலர் விரல்களில் பெரிய மோதிரத்தோடு மீசையை முறுக்கியவாறே மனைவியை ஏறிட்டார்.
“புள்ளை, பசிக்குதுன்னு சொன்னா சாப்பாடு போடுறதை விட்டுவிட்டு தெருவுக்கு ஏன்டி போற? – கரகரப்பான குரலில் சற்றே மிரண்டாலும் தன்னை திடப்படுத்திக் கொண்டாள் பார்வதி.
“இன்னொரு புள்ளை வீட்டுக்கே இன்னும் வரல்ல. அது உங்க கண்ணுக்குத் தெரியலையா? மணி ஒன்பது தாண்டிப்போச்சே”
“காலையில எங்கிட்ட அப்படி எகிறிட்டு போனாளே. அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுறாளோ என்னவோ”
“என்னங்க இப்படிச் சொல்றீங்க? மீரா அப்படிப்பட்ட வீம்புக்காரியா? உங்களுக்குத் தெரியாதா?” – விசும்பினாள் பார்வதி.
“சரி. நீ ஆரம்பிச்சுடாதே. இன்னும் கொஞ்சநேரம் பார்ப்போம். முதல்ல சாப்பாடு போடு”
“முதல்ல அவ ஆபீஸ்வரை போய் பார்த்திட்டு வந்துடுங்களேன். எனக்கு பயம்மா இருக்கு. வயசுப் பொண்ணாச்சே”
“ஏன்டி கத்தி ஊரைக் கூட்டுற? சத்தம் போடாம இரு. கௌரி அவ சிநேகிதி எவ நம்பராவது உனக்கு தெரியுமாம்மா”
“தெரியலப்பா, இவ யாருக்கும் போன் பண்ணி பேசினதே இல்லையே! பேசாம இவளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கலாம். இப்ப எப்படி கான்டாக்ட் பண்றது.”
“கையில் செல்போன் இல்லன்னா என்ன? தெருவுக்கு தெரு வரிசையா போன் வெச்சிருக்கானே. ஒரு ரூபா செலவு பண்ணி நம்மகிட்ட பேசலாமில்ல. எல்லாம் திமிரு. அவ சொன்னதை நான் கேட்கல இல்ல அதான் பூச்சாண்டி காட்டுறா”.
“யாருப்பா அந்தப் பசங்க? நமக்குத் தெரிஞ்சவங்களா?”
“அதெல்லாம் இல்லம்மா. நம்ம காண்டீபனோட சொந்தக்கார பசங்களாம் அவன் சொன்னான்ணுதான் பணத்தைக் கொடுத்தேன். முதல்ல ஒழுங்கா வட்டி கட்டிட்டு வந்தானுங்க இப்ப படிப்பு முடிஞ்சதும் அப்படியே கம்பிய நீட்டிடலாம்னு பார்க்கிறானுங்க”
“அப்படின்னு அவனுங்க சொன்னாங்களா? நீங்களா எதையாவது கற்பனை பண்ணிட்டு உளறாதீங்க” – பார்வதி சிடுசிடுத்தாள்.

ASIN ‏ : ‎ B0CNPLW9ZS
Publisher ‏ : ‎ Geeye Publications (19 November 2023)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 674 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 223 pages

Scroll to Top