அபூர்வ சங்கமம் (Tamil Edition)


Price: ₹125.00
(as of May 01, 2024 22:18:14 UTC – Details)



எதிர்பாராமல் அது நடந்து முடிந்துவிட்டது.
அந்தக் குடும்பத்தில் யாருமே அதை எதிர்பார்க்கவில்லை!
துரை நன்றாகத்தான் இருந்தான். நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக எந்த நேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு மாரடைப்பு வரும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?
முதல் நாள் இரவு வரை நன்றாகத்தான் இருந்தான். வழக்கம் போல மூன்று சப்பாத்தி என சாப்பிட்டு, பால் குடித்தான். பத்து மணி வரை டிவி பார்த்தான். பிறகு வந்து படுத்தான். உடனே வழக்கம் போல உறங்கியும் போனான்!
காலை நாலரைக்கு சந்திரிகா எழுந்து வீட்டு வேலைகளைத் தொடங்கி விட்டாள்.
துரைக்கு ஏழு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டாக வேண்டும்!
ஏழரைக்கு பேக்டரியில் ‘பன்ச்’ செய்தாக வேண்டும்!
அஞ்சரை மணிக்கு சந்திரிகா அவனை எழுப்பினாள்
“ஷேவ் பண்ணிக்க வேண்டாமா?”
“வந்துட்டேன்!”
பல் தேய்த்து விட்டு வந்து, அவள் தந்த காபியைக் குடித்த பின், ஷேவ் செய்யத் தொடங்கிய நிமிடம், மாரில் சுருக்கென ஒரு வலி புறப்பட்டது!
முதலில் அதைப் பொருட்படுத்தாமலே லேதரைக் குழைத்து முகத்தில் சீராகத் தடவத் தொடங்கினான்.
ரேஸரை முகத்தில் வைத்த நிமிடம் அடுத்த சுருக்.
இது சுள்ளென்று சற்று பலமாகவே இருக்க,
‘ஏன் மாரை வலிக்கணும்? ஒரு மாதிரி மூச்சைப் பிடிப்பதைப் போலிருந்தது.’
நெஞ்சு முழுக்க, தொண்டையிலிருந்து தொடங்கி, அதிவேகமாக ஒருவித எரிச்சல் படரத் தொடங்க,
வலி அதிகமாகி, நெஞ்சின் மையத்தில் ஒரு பாறையை வைத்ததைப்போல பாரம் அதிகமாக, வியர்வை தொடங்கி விட்டது.
உள்ளே குக்கர் விசிலடிக்கத் தொடங்கி விட்டது.
“சந்திரிகா…!”
குரல் கொடுத்தான். அவனுக்கே அது கேட்கவில்லை!
“சந்திரி… உன்னைத்தான்!”
அவள் மிக்ஸியில் சாம்பாருக்கு அரைத்துக் கொண்டடிருந்தாள்.
ஷேவ் பண்ண முடியாமல், அப்படியொரு வியர்வை முகம் முழுக்க உண்டாகி வேதனை கொடுக்க,
தடுமாறிப்போய் சோபாவில் வந்து உட்கார்ந்தான்.
சந்திரிகா வெளியே வந்தாள்.
“என்ன இது? ஷேவ் பண்ணாம இங்கே வந்து ஒக்காந்துட்டீங்க?”
பேச்சே இல்லை!
அருகில் வந்தாள்.
“ஏன் உங்களுக்கு இப்படி வேர்த்திருக்கு?”
அவன் முகம் ஒரு மாதிரி கோணிக் கொண்டு, வலியில் துடிப்பதைப் பார்த்ததும், அலறி விட்டாள் சந்திரிகா.
“அத்தே! சீக்கிரம் எழுந்து வாங்களேன் அவர் என்னவோ மாதிரி இருக்கார்!”
மாமியாரை உலுக்கினாள்.
நாத்தனார் கௌரியும் எழுந்து விட்டாள்.
“அண்ணி! பார்த்தா ஹார்ட் அட்டாக் மாதிரி இருக்கு!”
“வாயை மூட்றி!” அம்மா அதட்ட,
சந்திரிகா பக்கத்து ஃபிளாட் கதவைத் தட்டினாள்.
அந்த மனிதர் வந்து விட்டார்.
பத்தே நிமிடங்களில் தீப்பற்றிக் கொண்டதைப் போல ஆகிவிட்டது.
சடுதியில் கூட்டம் சேர்ந்து விட்டது.
யாரோ ஆட்டோவுக்காக ஓடினார்கள்.
ஆட்டோ வந்து விட்டது. துரை ஏற்றப்பட்டான். சந்திரிகா, மாமியார், பக்கத்து வீட்டுக்காரர் ஆட்டோவில் ஏறினார்கள்.
“கௌரி பாத்துக்கோடி!”
ஆட்டோ விரைந்தது.
பத்தே நிமிடங்களில் நர்ஸிங் ஹோமை அடைய, ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டான் துரை.
எமர்ஜென்சியில் அனுமதிக்கப்பட்டான்.
டாக்டர்களின் பரபரப்பான இயக்கம்.
அரைமணி நேரம் கழித்து ஒரு டாக்டர் வெளிப்பட்டார்.
“டாக்டர்! என்ன?”
“ஸாரிமா! 12 மணி நேரம் தாண்டினாத்தான் எதுவும் சொல்ல முடியும். மாஸிவ் அட்டாக். நிலைமை ரொம்ப கவலைக்கிடமா இருக்கு!”
“பகவானே!” அம்மா அலறி விட்டாள்.
“ஷ்! சத்தம் போடக்கூடாது. நீங்க யாரும் இங்கே இருக்க வேண்டாம். சி.எம்.ஓ வர்ற நேரம். பார்த்தா சத்தம் போடுவார். போங்கம்மா!”
இருவரும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார்கள்.
பக்கத்து வீட்டுக்காரர் அங்கேதான் இருந்தார்.
“நீங்க அத்தையை கூட்டிட்டுப் போயிடுங்க. நான் மட்டும் இங்கே இருக்கேன்!”
“நான் எப்படி போவேன் சந்திரி?”
“அத்தே! இந்த நேரத்துல நீங்களும் படுத்துட்டா நான் நாறிப் போவேன். புரிஞ்சுக்குங்க!”
“ஆமாம்மா! அவங்க மட்டும் இங்கே இருக்கட்டும். வாங்க போகலாம்!”
அப்போது தான் விடியத் தொடங்கியிருந்தது.
துரைக்கும் சந்திரிகாவுக்கும் கல்யாணம் முடிந்து ஆறு வருடங்கள் முடிந்தாகிவிட்டது இதுவரை குழந்தைகள் இல்லை!
டாக்டர்கள் பரிசோதித்தாகி விட்டது. எந்தக் குறையும் சொல்லப்படவில்லை.
துரை அந்த ரசாயன சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ஃபோர்மேன்.
பிடித்தம் போக கையில் மாதம் எட்டாயிரம் வரை வரும்!
விதவை அம்மா! கல்யாணம் ஆகாத தங்கை!
சந்திரிகா பட்டதாரிதான். ஸ்டெனோ கிராஃபி தெரிந்தவள்.
உத்யோகமும் பார்த்த பெண்தான்.
துரைக்கு அவளை வேலைக்கு அனுப்புவதில் இஷ்டமில்லை..

ASIN ‏ : ‎ B0CY8Z497Y
Publisher ‏ : ‎ Geeye Publications (21 March 2024)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1408 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 51 pages

Scroll to Top