தாத்தா! (Tamil Edition)


Price: ₹99.00
(as of Mar 12, 2024 21:01:08 UTC – Details)“எங்க அப்பனுக்கு கிறுக்குதான் பிடிச்சிருக்கு. சாகப்போற காலத்தில இந்த மானங்கெட்ட பொழப்பு தேவையா? போயும் போயும் அந்தப் பய கால்ல போய் விழணும்னு பறக்கறாரே” சத்தமாய் புலம்பிக் கொண்டே மடிப்பு கலையாத ஆடைகளை கட்டிலில் அமர்ந்து பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மகனிடம் நீட்டினாள் செல்வி.
தாத்தாவிற்கு தேவையான மருந்து மாத்திரைகள் மருத்துவ குறிப்புகள் அடங்கிய கோப்பு என ஒவ்வொன்றாய் கவனமாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஹரிகிருஷ்ணா சலிப்பாய் திரும்பினான்.
“உங்களுக்கு ஏம்மா இவ்வளவு கசப்பு பரசு மாமா மேல்”
“கசப்பு தாண்டா. மனுஷனா அவன்? ஊர்ல உலகத்தில் இல்லாத மேனகையை கட்டின மாதிரி பொண்டாட்டியோட முந்தியை பிடிச்சிட்டே திரிவான். பொசகெட்ட பய”
“அம்மா மனைவி பின்னால அலைவதில் தப்பு என்ன? அடுத்த பெண்கள் பின்னால தான் சுத்தக்கூடாது”
“ஏய் என்னடா இப்பவே உம் மாமன் புத்தி வந்துடுச்சா? போற போக்கை பார்த்தால் நீயும் அவனை மாதிரி பொண்டாட்டி தாசனாய் ஆயிடுவ போலிருக்கு”
“அன்பான மனைவி கிடைத்தால் அந்த அன்பிற்கு அடிமையாய் கிடக்கலாம்மா. மனைவின்ற உறவுதான் நம்ம இறுதி மூச்சு வரைக்கும் கூடவே வருது. அந்த உறவுக்கான மரியாதையை நாம தந்து தானேம்மா ஆகணும்” என்ற மகனை பார்த்து வாயிலடித்துக் கொண்டாள் செல்வி.
“அய்யோ… அய்யோ… இப்பவே இப்படி பேசுறானே. நாளைக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா என்னை தெருவுக்கு அனுப்பிடுவான் போலிருக்கே! அய்யனாரப்பா நான் என்ன பண்ணுவேன்”
“அம்மா என்ன பேசுறீங்க. மனைவியை மதிக்கணும்னு தான் சொன்னேன். தாயை தூக்கியெறியணும்னு நான் சொல்லல”
“தூக்கியெறிவீங்கடா. பொண்டாட்டியை தலையில வெச்சுக்கிட்டா எங்களை காலால் எட்டி உதைப்பீங்க”
“சேச்சே… உயிர் கொடுத்த அன்னையை உதைப்பதா? என்னம்மா நீங்க? எங்களுக்கு உயிர், உதிரம், உடல், பிறவி, வாழ்க்கை இப்படி எல்லாமே தந்தது நீங்க தானேம்மா. இந்த உடலும் உயிரும் நீங்க போட்ட பிச்சைம்மா. பெத்தவங்களை யாராலும் வெறுக்கவோ ஒதுக்கவோ முடியாது”.
“ஒதுக்கிட்டு போனானே ஒருத்தன். பெத்த தாய்க்கு பதினாறு காரியம் கூட பண்ணாம அவன் பொண்டாட்டிய ஏதோ ரெண்டு வார்த்தை சொல்லிட்டோம்னு பொசுக்குனு கிளம்பிப் போயிட்டானே! பெத்த தகப்பன்கிட்டயே அவ்வளவு வீராப்பு அவனுக்கு. போனதே போனான் இதுவரை இந்த பக்கம் வந்து எட்டிப் பார்த்தானா? எல்லாரும் உசுரோட இருக்கோமா இல்லையான்னு கூட தெரியாது. அந்த காலத்துலயே அந்தப் பயலை எம்.ஏ. வரைக்கும் படிக்க வெச்சாரு என் அப்பா.
அந்தப் பயலுக்கு வந்து வாய்ச்சவளும் கொஞ்சம் படிச்சவதான். அந்த தைரியத்துல நண்டு சிண்டாய் கிடந்த ரெண்டு பொட்டப் புள்ளைகளையும் கூட்டிட்டு கண்காணாத தூரத்துக்கு போயிட்டான்”
“ஏம்மா மாமா ரொம்ப அமைதியானவர்னு எல்லாரும் சொல்றாங்க. அவரே கோபப்பட்டு ஊரை விட்டு போகிற அளவுக்கு அப்படி என்னதான் பேசுனீங்க”
“என்னத்த பேசிட்டோம்? புருஷனும் பொண்டாட்டியும் எங்களுக்கு தெரியாம செய்ததை உறவுக்காரங்க முன்னால பேசினோம். அதுக்குப்போயி உம்மாமன் பேயாட்டம் ஆடிட்டானே”
“அப்படி என்ன தான் செய்தாங்க”
“என்னதான் செய்தாங்களா? வீட்ல யாரையும் ஒரு வார்த்தை கேட்காம குடும்ப கட்டுப்பாடு செய்திட்டு வந்திட்டான்டா” ஏதோ பாவச்செயல் போல் செல்வி தீவிரமான முக பாவனையோடு சொல்ல புருவங்களை உயர்த்தினான் ஹரிகிருஷ்ணா.
“என்ன”
“அதான்டா குடும்பக்கட்டுப்பாடு”
“அது தெரியுதும்மா. அதுக்காகவா சண்டை போட்டீங்க”
“பின்ன ஏற்கனவே கல்யாணமாகி நாலு வருஷமா சும்மாதான் இருந்தா. உன் சின்ன மாமனுக்கு கல்யாணமாகி ரெண்டு புள்ள பொறந்த பிறகுதான் அவ உண்டானாள். மொதப்புள்ளயே பொட்டப் புள்ள. அப்புறம் நாலு அஞ்சு வருஷம் கழிச்சு இன்னொன்னை பெத்தா. அதுவும் பொட்டப்புள்ள”
“சரி இதுல அவங்க தப்பு என்னம்மா”
“என்னடா இப்படி கேட்கிறே? பொறந்தது ரெண்டும் பொட்டப்புள்ள அதுவே தாத்தாவுக்கு ரொம்ப வருத்தமா போச்சு”
“இதில் வருத்தப்பட என்ன இருக்கு. குழந்தையை தர்றது கடவுள்”
“யாரு இல்லைன்னு சொன்னது? அந்தக் கடவுள் ஒரு ஆண் வாரிசை தரும்வரை நாம காத்திருக்க வேண்டாமா? புள்ள பொறந்த ரெண்டாவது நாளே இவன் போயி குடும்பக்கட்டுப்பாடு செய்துட்டு வந்து நிக்குறான்”
“என்ன மாமாவே பண்ணிக்கிட்டாரா”
“ஆமா என்னவோ அவன் பொண்டாட்டி ரொம்ப பலவீனமா இருந்தாளாம். அதனால ரெண்டு குழந்தைங்க போதும்னு இவங்களே முடிவு பண்ணிட்டு எங்க யார்கிட்டயும் ஒருவார்த்தை கூட சொல்லாம இப்படி பண்ணிட்டாங்க”

ASIN ‏ : ‎ B0CNDCL7C9
Publisher ‏ : ‎ Geeye Publications (14 November 2023)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 543 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 111 pages

Scroll to Top